இராணுவத்தின் கஜபா றெஜிமென்டுக்கு இது வெள்ளி விழா ஆண்டு. 1983 ஒக்ரோபர் 14ம் திகதி கஜபா றெஜிமென்ட்டின் முதலாவது பற்றாலியன் உருவாக்கப்பட்டது.
அப்போது அதன் முதலாவது கட்டளை அதிகாரியாக நியமிக்கப்பட்டவர் லெப்.கேணல் விஜய விமலரட்ண. (அராலித்துறைக் குண்டுவெடிப்பில் கொல்லப்பட்ட மேஜர் ஜெனரல் விமலரட்ணவே இவர்)
ரஜரட்ட ரைபிள் றெஜிமென்ட் மற்றும் விஜயபா றெஜிமென்ட் ஆகியவற்றை சேர்ந்த படையினரைக் கொண்டே கஜபா றெஜிமென்ட் முதலில் உருவாக்கப்பட்டது.
அனுராதபுர சாலியபுரவில் உருவாக்கப்பட்ட இந்த பற்றாலியன் தலைமையகமே பின்னர் றெஜிமென்ட் தலைமையகமாக மாற்றப்பட்டது.
இந்தப் படைப்பிரிவில் 5 தொண்டர்படை பற்றாலியன்கள் உள்ளிட்ட 15 பற்றாலியன்கள் இருப்பது குறிப்பிடத்தக்கது.
முதலாவது கஜபா பற்றாலியனின் கட்டளை அதிகாரியாக லெப்.கேணல் கோத்தபாய ராஜபக்ஸ இருந்த போது வடமராட்சி மீதான ‘ஒப்பரேசன் லிபரேசன்’ நடவடிக்கையில் பங்கேற்றிருந்தது.
தற்போது போர்முனையில் முக்கிய பங்காற்றும் 53வது டிவிசன் தளபதி பிரிகேடியர் கமால் குணரட்ண, 58 டிவிசன் தளபதி பிரிகேடியர் சவீந்திர டி சில்வா, இராணுவ நடவடிக்கைப் பணிப்பாளர் உதய பெரேரா, விசேட படைப்பிரிவு தளபதி பிரிகேடியர் நிர்மல் தர்மரட்ண, புதிதாக உருவாக்கப்பட்ட ஜனாதிபதி பாதுகாப்புப் படை தளபதி பிரிகேடியர் ஜெகத் அல்விஸ் போன்றோர் கஜபா றெஜிமென்டைச் சேர்ந்தவர்களே என்பது குறிப்பிடத்தக்கது.